தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திராவிடக் கோட்டையில் அடுத்தடுத்துப் புதுப்புது கூட்டணிக் கணக்குகள் உருவாகி வருகின்றன.

தவெக தலைவர் விஜய் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக மாஸ் காட்டியிருந்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுவதால் கூட்டணிக் கட்சிகளை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) அவசரச் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலா இரண்டு தொகுதிகளில் வென்றுள்ள இடதுசாரிக் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க தவெக தீவிரம் காட்டி வரும் சூழலில், புதிய அரசு அமைப்பதில் தவெக தலைவர் விஜய்க்குத் தங்களது ஆதரவை வழங்குவதா அல்லது திமுக கூட்டணியிலேயே நீடிப்பதா என்பது குறித்து இந்த அவசரச் செயற்குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக விவாதித்து இறுதி முடிவெடுக்க உள்ளனர்.