மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள துனாய் கிராமத்தில், பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஒரு குடும்பத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராம்கிருஷ்ணா குஷ்வாஹா என்பவருக்கு மே 1-ஆம் தேதி அன்றுதான் மிகவும் விமர்சையாகத் திருமணம் நடந்தது.

மணப்பெண் புகுந்த வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் உறவினர்கள் அனைவரும் வீடே திருவிழா கோலமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அந்த வீட்டில் சிரிப்பும் கொண்டாட்டமுமாகவே இருந்த நிலையில், விதி யாராலும் எதிர்பார்க்காத ஒரு விளையாட்டை விளையாடியது.

மதிய நேரத்தில் ராம்கிருஷ்ணா குஷ்வாஹா வீட்டில் டீ கேட்டார். டீ தயாராகும் வரை வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தின் நிழலில் அவர் ஓய்வெடுக்கப் படுத்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

பதறிப்போன குடும்பத்தினர் அவரை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மணக்கோலம் கலைவதற்குள் அந்த வீடே மயான அமைதியாக மாறியது.

கைகளில் மருதாணி கூட அழியாத நிலையில், தன் கணவரைப் பறி கொடுத்த அந்தப் பெண்ணின் நிலை அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் விடச் செய்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இந்த இதயத்தை உலுக்கும் சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.