மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மகாராஜ்புரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் இந்த நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியுள்ளது. டிடி நகர் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் வீடு ஒன்றில், இரும்பு கம்பிகளைத் திருடும் நோக்கில் மனோஜ் என்ற நபர் திங்கட்கிழமை இரவு புகுந்துள்ளார்.

கம்பிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைக்க முடியாததால், ஜன்னல் வழியாக கையை விட்டு பூட்டைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக ஜன்னல் கம்பிகளுக்கு இடையே அவரது கை பலமாக சிக்கிக் கொண்டது.

 

இரவு முழுவதும் எவ்வளவோ போராடியும் கையை வெளியில் எடுக்க முடியாமல், விடிய விடிய ஜன்னல் ஓரத்திலேயே திருடன் மனோஜ் தவம் இருந்துள்ளார். மறுநாள் காலை வீட்டின் உரிமையாளர் ராஜ்குமார் யாதவ் வந்து பார்த்தபோது, ஜன்னலில் கை சிக்கி திருடன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீசார் வருவதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் திருடனை அடிக்காமல், அவரிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில் தான் இதுவரை 8 திருட்டுகளைச் செய்துள்ளதாகவும், சில வழக்குகளில் ஜாமீனில் வந்திருப்பதாகவும் திருடன் மனோஜ் ‘கூலாக’ ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜன்னலில் இருந்து அவர் கையை மீட்டு கைது செய்தனர். “இவர் ஒரு பழக்கமான திருடன், கட்டுமான இடங்களில் கம்பி திருடுவதையே வேலையாக வைத்துள்ளார்” என காவல் ஆய்வாளர் யஷ்வந்த் கோயல் தெரிவித்துள்ளார்.