ஒரு கிராம் தங்க தாயத்திற்காக இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்திய இளைஞரின் செயல் கடலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் தன்னைத் தீவிரமாகத் தேடுவதை அறிந்த கடத்தல்காரன், பயந்துபோய் குழந்தையைச் சாலையோரம் இறக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார். அவ்வழியாக வந்த ஜெயக்குமார் என்பவர், தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டுப் பத்திரமாகக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குழந்தையைக் கடத்திய வெற்றிவேல் என்ற இளைஞரை கைது செய்தனர். குழந்தை அணிந்திருந்த ஒரு கிராம் தங்க தாயத்தைத் திருடுவதற்காகவே இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறிய நகைக்காகக் குழந்தையைக் கடத்திய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
