திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், புதியவர்களாகிய தங்களுக்கு மக்கள் கொஞ்சம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், முந்தைய ஆட்சிக் காலங்களை விட த.வெ.க. ஆட்சியில் அரசு அலுவலக செயல்பாடுகளின் மாற்றம் என்ன என்பதை அனைவரும் விரைவில்கண்கூடாகக் காணலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், கடந்த ஆட்சியில் தேங்கிய பணிகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், திருப்பூரில் தேங்கியுள்ள சாய திடக்கழிவுகளை அகற்றுவதற்காகச் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளதாகவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் வருவாய்த்துறை பணிகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.