காரைக்காலில் ஆதரவற்ற நிலையில் தவித்த முனுசாமி 84 வயதுடைய முதியவர், தன் பிள்ளைகளிடம் ஜீவனாம்சம் வேண்டி சட்டப் போராட்டம் நடத்தி நீதி பெற்றுள்ளது சமூகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக வறுமையுடன் போராடி வந்த அவர், தனது மூன்று மகன்களும் மாதம் தலா ரூ.2,000 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார்.

மேலும் மகன்கள் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்த போதிலும், அவர்களுக்குத் தோல்வியே மிஞ்சியது. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தந்தைக்கும், சட்டத்திற்கும் மகன்கள் காட்டிய அலட்சியம் கடும் கண்டனத்திற்குள்ளானது.

இந்நிலையில் தந்தைக்கே உரிய உரிமையைக் கூட வழங்க மறுத்து வந்த மகன்களின் செயலைக் கடுமையாகக் கண்டித்த காரைக்கால் நீதிமன்றம், அவர்களைக் கைது செய்து ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டது.

மேலும், தந்தை கோரிய ஜீவனாம்சத் தொகையை உடனடியாக வழங்கத் தவறினால் சிறைத்தண்டனை தொடரும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெற்றவர்களைக் கைவிடும் வாரிசுகளுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.