பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற ஆர்சிபி (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, பாதுகாப்பு கேமராக்களைச் செயலிழக்கச் செய்ததாக இரண்டு ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 240-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் திடீரென வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்தியதில், சிசிடிவி நிறுவனத்தில் பணியாற்றிய மஞ்சுநாத் மற்றும் அப்துல் கலாம் ஆகிய இருவர் திட்டமிட்டே இந்தச் சதியைச் செய்தது தெரியவந்தது. அதிகமான மக்கள் கூடும் ஒரு முக்கியமான நிகழ்வின் போது, கண்காணிப்பு கேமராக்களைச் செயலிழக்கச் செய்தது மைதானத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
ஸ்டாக்கு டெக்னாலஜிஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், கப்பன் பார்க் போலீசார் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் சதி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
