பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) அமர்ந்து கொண்டு இ-சிகரெட் புகைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஆடை மாற்றும் அறையில் அமர்ந்திருந்த கேப்டன் ரியான் பராக், சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் முன்னிலையில் இ-சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் நேரலையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) விதிமுறைகளின்படி, வீரர்கள் தங்கும் பகுதி ஆடை மாற்றும் அறை மற்றும் மைதானத்தில் புகைபிடிக்கவோ அல்லது ‘வேப்பிங்’ செய்யவோ கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ-சிகரெட் பயன்படுத்த சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிமுறை மீறலுக்காக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ரியான் பராக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. சட்டப்படி இதற்கு ₹5 லட்சம் வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் மைதானத்தில் செல்போன் பயன்படுத்தியதற்காக ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கேப்டனே சர்ச்சையில் சிக்கியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக 2020 ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி வீரர் ஆரோன் பின்ச் இதுபோன்று வேப்பிங் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்ற ஒரு செயலில் ரியான் பராக் ஈடுபட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.