ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது பேட்டில் ‘ஏஐ சிப்’ (AI Chip) பயன்படுத்துவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் விமர்சகர் சுமத்திய குற்றச்சாட்டுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் 40 பந்துகளுக்குக் குறைவாக இரண்டு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நுமான் நியாஸ், “வைபவ் அதிக சக்தியை உருவாக்க தனது பேட்டில் ஏஐ சிப் பயன்படுத்துகிறார்” எனப் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
𝘉𝘢𝘵 𝘱𝘦 𝘈𝘐 𝘤𝘩𝘪𝘱 𝘩𝘢𝘪 𝘬𝘺𝘢 𝘵𝘶𝘮𝘩𝘢𝘳𝘦?
Vaibhav answers 😂💗 pic.twitter.com/uZcqABbaGS
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2026
இந்த சர்ச்சை குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட வீடியோவில் பதிலளித்த வைபவ், “எனது பேட்டில் கடவுளே சிப்-ஐ பொருத்தி அனுப்பியுள்ளார். மேலே இருக்கும் கடவுள் உனது பேட்டில் ஒன்றை வைக்கிறேன் என்று கூறி கொடுத்ததைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன்” என நக்கலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த இந்த இளம் இடதுகை ஆட்டக்காரர், தற்போது ஆரஞ்சு தொப்பி பந்தயத்தில் முன்னிலையில் உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய வைபவ், டி20 போட்டிகளில் இதுவரை 99 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்னும் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில், மிகக் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை எட்டிய உலக சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
