தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19-ஆவது ஐ.பி.எல் தொடரில், இளம் வீரர்களின் அபாரமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், “ஐ.பி.எல் பார்மை வைத்து இந்திய டி20 அணியில் யாருக்கும் இடம் கிடைக்காது என்று முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்த ஐ.பி.எல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஆடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்ந்து வருகிறது. அதேபோல, ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியும் இரண்டாம் இடத்தில் பலமாக உள்ளது.

இந்தத் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ரன் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய டி20 அணியில் இவர்களுக்கு இடம் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், தற்போதுள்ள இந்திய டி20 அணியில் எந்த ஒரு வீரரையும் நீக்கிவிட்டு இவர்களுக்கு இடம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பலரும் ஐ.பி.எல் பார்மை பார்த்து அணியில் சேர்க்கச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய டி20 அணியானது ஏற்கனவே 2024 மற்றும் 2026 என அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற பலமான அணியாக உள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இப்போதுள்ள அணியில் யாரை நீக்கிவிட்டு ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ரஜத் பட்டிதார் போன்றவர்களுக்கு இடம் கொடுப்பீர்கள்? எனவே, ஐ.பி.எல்-லில் எத்தனை ரன்கள் எடுத்தாலும் தற்போதைய இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் என்றார்.

இந்திய டி20 அணி சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்க முன்வராத வரை இந்த இளம் வீரர்களுக்குக் காத்திருப்பு காலம் நீளும் என்றே சேவாக்கின் கருத்து உணர்த்துகிறது. இது ஒருபுறம் இளம் வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இந்திய அணியின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.