தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் பெற்றோர் ஆசிரியர் கழகப் புதிய நிர்வாகிகள் நியமனத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மட்டுமே தலைவராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற மரபு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் த.வெ.க மாவட்டச் செயலாளர் அனுப்பிய பரிந்துரைக் கடிதம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ள சூழலில், கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பதவிக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிகளில் நேரடி அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற அரசின் உன்னத நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், த.வெ.க-வின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச் செயலாளர் சுரேஷ், தனது அதிகாரப்பூர்வ கட்சி லெட்டர் பேடில் தங்களது கூட்டணிக் கட்சியான விசிக-வின் மாவட்டச் செயலாளர் தமிழ்மணிக்கு இப்பதவியை வழங்கக் கோரி பள்ளித் தலைமையாசிரியருக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் கல்வித் துறை வட்டாரங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிருஷ்ணகிரி மாவட்ட அரசியல் களத்திலும் தற்பொழுது பெரும் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.”