தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முறையாகப் பராமரிக்கப்படாத பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை சுமார் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் சுற்றுச்சுவர் நீண்ட நாட்களாகப் பராமரிக்கப்படாமல், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளது.
இதனைச் சீரமைக்கக் கோரி ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குப் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி காலை காமராஜபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தண்டபாணி – அபிராமி தம்பதியரின் 3 வயது மகள் தாரிகா, பள்ளி நுழைவு வாயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகப் பலவீனமாக இருந்த தடுப்புச் சுவர் திடீரென இடிந்து சிறுமியின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் சிறுமியின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதி இடிபாடுகளில் சிக்கி நசுங்கியது. பலத்த காயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் கவுண்டர் பழனிமுத்து கூறுகையில், அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம். பள்ளி வேலை நாட்களில் இந்தச் சுவர் இடிந்திருந்தால் பல மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்களைத் திரட்டிப் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார். மேலும் பள்ளிச் சுவர்கள் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
