நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக் கலைக்குமாறு சேதுபதி வற்புறுத்தியதால், அந்தப் பெண் கருவைக் கலைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை கேட்டபோது, சேதுபதி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சேதுபதியின் பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சேதுபதி மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
