சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் காதலியைக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பவ்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த பாரதி பெருமாள் ஆகிய இருவரும் காதலர்கள் என்று கூறி அந்த லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, பவ்யா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதும், பாரதி பெருமாள் தூக்கில் தொங்குவதும் தெரியவந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பாரதி பெருமாள் தனது காதலி பவ்யாவை கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர் போலீசுக்கு பயந்து அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பெரியமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வயதான காதலர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
