தஞ்சாவூர் அருகே கடந்த ஆண்டு தனது மகளை நடுரோட்டில் வைத்துத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த இளைஞனை, ஜாமீனில் வந்தபோது அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மேல களக்குடியைச் சேர்ந்த ஆசிரியை காவியா, கடந்த நவம்பர் மாதம் பள்ளிக்குச் சென்றபோது அஜித்குமார் என்பவரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையிலிருந்த அஜித்குமார், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தனது மகளைக் கொன்றவன் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்டு ஆத்திரமடைந்த காவியாவின் தந்தை, தனது உறவினர்களுடன் சேர்ந்து அஜித்குமாரைப் பின்தொடர்ந்து சென்று கொடூரமாக வெட்டிச் சாய்த்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்க, கொலையைச் செய்த காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் நேராக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தனர். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டம், இறுதியில் ஒரு கொடூரமான பழிவாங்கலில் முடிந்துள்ள செய்தி தஞ்சை மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.

காதல் விவகாரத்தில் தொடங்கிய இந்த மோதல், அடுத்தடுத்து இரண்டு உயிர்களைப் பலிவாங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதானவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.