சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பாய் ஜியான், கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துள்ள மனிதாபிமானச் செயல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த பாய் ஜியான், தனது வருமானம் மற்றும் வாங்கிய கடன்களைக் கொண்டு சுமார் 300 ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
‘ட்ரீம் ஹோம்’ என்று அழைக்கப்படும் இவரது இல்லத்தில் வளரும் குழந்தைகள், இன்று சிறந்த விளையாட்டு வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் உயர்ந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:30 மணிக்கே குழந்தைகளை எழுப்பி, 12 கிலோமீட்டர் தூரம் ஓட வைக்கும் பாய் ஜியான், “விளையாட்டு என்பது நேர்மையானது, நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்” என்ற தாரக மந்திரத்தை அவர்களுக்குப் புகட்டியுள்ளார்.
இவரது பயிற்சியால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுள்ளனர். மேலும், இவரது இல்லத்தில் வளரும் குழந்தைகள் இதுவரை மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 1,300-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று குவித்து மிரட்டியுள்ளனர். தனது திருமண வாழ்வை விடக் குழந்தைகளின் எதிர்காலமே முக்கியம் என வாழ்ந்து வரும் பாய் ஜியானை, சீன மக்கள் அன்போடு ‘சூப்பர் அப்பா’ என அழைத்து வருகின்றனர்.
