இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே புதிய பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 2.4 பில்லியனில் இருந்து 5 பில்லியன் டாலராக ($5 Billion) அதாவது இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் (100%) நியூசிலாந்து அரசு முழுமையான வரி விலக்கு அளிக்க முன்வந்துள்ளது. இது இந்தியாவின் ஜவுளி, மருந்து மற்றும் பொறியியல் துறைகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையும். ​மறுபுறம், நியூசிலாந்தின் சுமார் 95% பொருட்களுக்கு இந்தியா வரி சலுகைகளை வழங்குகிறது, இதில் 70% பொருட்களுக்கு உடனடியாக வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.

குறிப்பாக கம்பளி, நிலக்கரி, மரம் மற்றும் பழங்கள் (அவகேடோ, புளூபெர்ரி) போன்ற பொருட்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். அதே சமயம், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பொருட்கள் (Dairy) மற்றும் சில முக்கிய வேளாண் பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மட்டுமின்றி, அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 5,000 வேலைவாய்ப்பு விசாக்களை வழங்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.