மேற்கு வங்கத்தில்நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி பீர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. குறிப்பாக பீர்பூம் மாவட்டத்தின் கைராஷோல் பகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அந்த வாக்குகள் பாஜகவிற்குச் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும்இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் கற்களை வீசித் தாக்கியதில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஓட்டுநர் எனப் பலர் காயமடைந்தனர், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
நிலைமை கைமீறிச் சென்றதால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்குப்பதிவு நிலவரத்தைப் பார்க்கும்போது திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவுக்கு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், தனக்குப் பதவிகள் மீது ஆசை இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது அமைதியை நிலைநாட்டப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
