ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்தியர்கள் யாரும் விமானம் மூலமாகவோ அல்லது தரைவழியாகவோ ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், அங்குள்ள இந்தியத் தூதரகத்தைத் உடனடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
தூதரகம் வழங்கும் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றி, இந்தியர்கள் அனைவரும் ஈரானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தப் பாதுகாப்பு எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.
