பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் ஐபோன் அசெம்பிளி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில், பெண் தொழிலாளி ஒருவர் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலேயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ரேணுகா (19) என்ற இளம்பெண், தேவனஹள்ளியில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாத அவர் கர்ப்பமடைந்த நிலையில், அந்தத் தகவலை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை அன்று அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்குச் சென்ற அவர், அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்தால் சமூகத்தில் அவமானம் ஏற்படும் என்ற பயத்தில், அந்தக் குழந்தையைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

குழந்தை சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக அதன் வாயை அழுத்திப் பிடித்த அவர், பின்னர் குழந்தையைக் கொலை செய்து அதன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி கழிவறையிலேயே ஊற்றி மறைக்க முயன்றுள்ளார். ஆனால், குழந்தையின் தலைப்பகுதி கழிவறைக் குழியில் சிக்கிக் கொண்டதால், பயந்துபோன ரேணுகா எதுவுமே தெரியாதது போல மீண்டும் தனது வேலைக்குத் திரும்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் தொழிலாளி கழிவறையைப் பயன்படுத்தச் சென்றபோது, அங்கு ரத்தக் கறைகளையும் குழந்தையின் உடற்பகுதியையும் கண்டு அலறியுள்ளார். உடனடியாகத் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் ரத்தக் கறைகளின் அடிப்படையில் ரேணுகா அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். பிரசவத்தின் போது அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே ஃபாக்ஸ்கான் வளாகத்தில் உள்ள விடுதி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆண் சிசு ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓராண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு சிசு கொலை அதே வளாகத்தில் நடந்துள்ளது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.