குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பழைய இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜுஹாபுரா பகுதியைச் சேர்ந்த முகமது சாலிக் இம்தியாஸ் ஹுசைன் ஷேக் என்ற அந்த இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு பதிவிட்டிருந்த ஒரு ‘ஸ்டோரி’ மூலம், “உங்களால் முடிந்ததைச் செய்து பாருங்கள்” எனச் சவால் விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பழைய விவகாரத்தை மனதில் வைத்துக்கொண்டு, கடந்த புதன்கிழமை இரவு அவரிடம் தகராறில் ஈடுபட்ட ஒரு கும்பல், அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ரேஹான், ஃபைசல் பதான் மற்றும் ஃபைசான் பதான் ஆகிய மூன்று பேரை வேஜல்பூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இதனால் தாக்குதலின் போது சாலிக்கை ரேஹான் பிடித்துக்கொள்ள, மற்றவர்கள் கத்தியால் குத்தியும் கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் நண்பர் ஒருவரும் காயமடைந்துள்ள நிலையில், சமூக வலைதள மோதல்கள் இவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.