பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பப்பு யாதவ், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, “90 சதவீத பெண்கள் ஆண் தலைவர்களின் அறைக்குச் செல்லாமல் அரசியலில் நுழைய முடியாது” என்று அவர் கூறியதற்கு, பீகார் மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், சுமார் 70 முதல் 80 சதவீத அரசியல்வாதிகள் ஆபாசப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், இது குறித்து தான் ஏற்கனவே நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். தனது கைபேசி உட்பட அனைத்து அரசியல்வாதிகளின் கைபேசிகளையும் சோதனைக்கு உட்படுத்தினால் உண்மை வெளிவரும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இதனால் மற்றவர்கள் மீது கல்லெறியும் முன் தங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பப்பு யாதவ், பல முன்னாள் அமைச்சர்களின் அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்டல் தொனியிலும் பேசியுள்ளார். ஆண் அரசியல்வாதிகள் பெண்களைச் சுரண்டுவதை எதிர்த்துத்தான் தான் போராடுவதாகவும், சுமார் 755 ஆண் அரசியல்வாதிகள் மீது பாலியல் சுரண்டல் புகார்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பெண்களைச் சுரண்டிவிட்டு, பிறகு பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிப் பேசுவது ஒட்டுமொத்த நாட்டிற்கே கறை படிந்த விஷயம் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இவருடைய இந்தத் தொடர்ச்சியான கருத்துக்கள் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
