உடற்பயிற்சி கூடத்தில் (Gym) நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி செய்த 23 வயது இளைஞருக்கு மூளையில் ரத்தக் குழாய் வெடித்து பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், ‘கோல்டன் அவர்’ (Golden Hour) எனப்படும் பொன்னான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார்.
நாக்பூரைச் சேர்ந்த ஓம் போயர் (23) என்ற இளைஞர், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஜிம்மில் வழக்கம் போல பல மணி நேரம் தீவிர உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே அவர் எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார்.
ஓம் போயரின் தாய் ஆர்த்தி போயர் ஒரு செவிலியர் (Nurse) என்பதால், தனது மகன் மயங்கி விழுந்ததன் தீவிரத்தை உடனடியாக உணர்ந்தார். இது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகித்த அவர், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாகத் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனையில், ஓம் போயரின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, ரத்தம் உறைந்து கட்டி உருவானது கண்டறியப்பட்டது.
பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சச்சின் தோம்னே தலைமையிலான குழுவினர், இளைஞருக்கு உடனடியாக ‘மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி’ (Mechanical Thrombectomy) என்ற நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்தச் சிகிச்சையின் மூலம் மூளையில் ரத்த ஓட்டத்தைத் தடுத்த கட்டியை அகற்றி, மீண்டும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கினர்.
ஆரம்பத்தில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் இளைஞரின் மன உறுதியால், ஏப்ரல் 21-ஆம் தேதி அவர் தனது சொந்தக் காலில் நடந்து வீடு திரும்பினார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “உடல் வலிமைக்காகவும், கட்டுக்கோப்பான உடலமைப்பிற்காகவும் அளவுக்கு அதிகமாகவும், முறையற்ற விதத்திலும் உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இது போன்ற விபரீதங்களைத் தவிர்க்க, எப்போதும் உடற்பயிற்சி நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.
