தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கொட்டகுப்பம் 10 மற்றும் 11-வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராத அரசை கண்டித்து, ஒருமித்த கருத்துடன் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இன்று ஒரு வாக்காளர் கூட வாக்குச்சாவடிக்கு வராமல் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அரசு அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளிக்காததைக் கண்டித்து, அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென தனது உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எஸ்.பி. தலைமையிலான அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
