மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இங்கு குற்றாலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் விக்னேஷ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாக்குச் செலுத்த வந்த காட்டுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரபாகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென காவலர் விக்னேஷை சரமாரியாகத் தாக்கினார்.
இந்தத் திடீர் தாக்குதலில் காவலர் விக்னேஷின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட சக போலீஸார் மற்றும் பொதுமக்கள், உடனடியாக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, காயங்களுக்கு 15-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய பிரபாகரனை போலீஸார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாகரன் காவல்துறை மீது மிகுந்த வெறுப்பில் இருந்து வந்ததாகவும், போலீஸ் சீருடையைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும், இவர் காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
