தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஊர்களுக்குச் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் நள்ளிரவில் கடும் அவதிக்குள்ளாகினர். அரசின் இந்த மெத்தனப் போக்கிற்கு அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், பேருந்துகள் இன்றி தவித்தனர்.
கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் நள்ளிரவு முதல் காத்திருந்த பயணிகள், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் ஆத்திரமடைந்தனர். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பேருந்து நிலையங்களிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிளாம்பாக்கத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்துகள் இன்றி தவித்துள்ளனர். குடிதண்ணீர் கூட கிடைக்காமல் அவர்கள் பரிதவித்தது வேதனை அளிக்கிறது. தேர்தல் நாளில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் மக்கள் வெளியூர் சென்று வாக்களிப்பதைத் தடுக்கிறார்களா? என்ற ஐயம் எழுகிறது. ஒவ்வொரு மனிதனின் ஜனநாயக உரிமையைத் தடுக்கும் வகையில் செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குப்பதிவு அதிகரிப்பதைத் தடுக்க திமுகவினர் தில்லுமுல்லு செய்வார்கள், வாக்காளர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்” என சசிகலா தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதே நிலை நீடிப்பதாக வரும் செய்திகள், தேர்தலையொட்டிய அரசின் போக்குவரத்துத் திட்டமிடலில் உள்ள குளறுபடிகளையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
