மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் மின்னல் வேகத்தில் சைரன் சத்தத்துடன் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த ஆம்புலன்ஸின் உள்ளே ஒரு இளம் பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள், ஏதோ விபரீதம் என்று நினைத்து அந்த வாகனத்தை விடாமல் துரத்திச் சென்று ஒரு இடத்தில் மடக்கிப் பிடித்தனர். அவசர சிகிச்சைக்குச் செல்லும் நோயாளி யாராவது உள்ளே இருக்கிறார்களா என்று பார்த்த மக்களுக்கு அங்கே காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

​ஆம்புலன்ஸ் டிரைவரை மக்கள் சுற்றி வளைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசித் தடுமாறினார். இறுதியில், உள்ளே இருப்பது தனது தங்கை என்றும், அவருக்குப் பள்ளிக்கூடம் செல்ல நேரமாகிவிட்டதால் சீக்கிரம் கொண்டு போய் விடுவதற்காக ஆம்புலன்ஸைப் பயன்படுத்தியதாகவும் கூறி அதிர வைத்தார். பொதுமக்களின் அவசரத் தேவைக்காகப் பயன்பட வேண்டிய ஆம்புலன்ஸை இப்படித் தனிப்பட்ட வேலைக்காகப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.