மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சங்கல்ப் பரிஹார் என்பவரது தோட்டம் இப்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜப்பானின் புகழ்பெற்ற ‘மியாசாகி’ (Miyazaki) ரக மாம்பழங்களை இவர் இங்கே விளைவித்து வருகிறார். சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் 2.70 லட்சம் ரூபாய் வரை விற்கும் இந்த மாம்பழங்களை பாதுகாக்க, 20 ஆக்ரோஷமான வெளிநாட்டு ரக நாய்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களுடன் ஒரு பெரிய பாதுகாப்புப் படையே அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை திருடர்கள் இந்த விலை உயர்ந்த பழங்களை திருட முயன்றபோது, இவரது வளர்ப்பு நாய்கள் காயமடைந்த சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்பை இப்படி இரும்புக்கோட்டையாக மாற்றியுள்ளார். ​4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தோட்டத்தில் ஜப்பானின் மியாசாகி மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தானின் 5 கிலோ எடை கொண்ட ‘நூர்ஜஹான்’, சீனாவின் வெள்ளை நிற ‘ஐவரி’ என உலகின் மிக அரிதான 50-க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்த மாம்பழங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், புற்றுநோய்க்கு எதிரான சத்துக்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தோட்டத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், “இந்த மாம்பழத்தைச் சாப்பிட வேண்டுமானால் பெர்சனல் லோன் தான் வாங்க வேண்டும்” என வியப்புடன் கூறுகின்றனர். ஒரு சாதாரண விவசாயி தனது கடின உழைப்பால் உலகத்தரம் வாய்ந்த பழங்களை இந்திய மண்ணில் விளைவித்து சாதனை படைத்து வருகிறார்.