சமூகத்தில் இன்றும் வேரூன்றி இருக்கும் ஆணாதிக்க சிந்தனையை வெட்டவெளிச்சமாக்கும் விதமாக, திருமண வரண் தேடும் ஒரு ஆண் விதித்த நிபந்தனைகள் குறித்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓண்ட்ரிலா என்ற பிரபல திருமண மேட்ச்மேக்கர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஐஐடியில் படித்துவிட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றும் 37 வயது மதிக்கத்தக்க விவாகரத்தான ஆண் ஒருவர், தனக்கு வரண் தேடுவதற்காகத் தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த நபர், தனக்கு 30 வயதிற்கு உட்பட்ட, கடந்த காலத்தில் எந்தவொரு காதல் உறவிலும் (Relationship) இல்லாத, தனது சொந்தச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் வேண்டும் என்று முகத்திற்கு நேராக எந்தத் தயக்கமும் இன்றி கேட்டுள்ளார்.
“உங்களுக்கே விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை கண்டிஷன்?” என்று ஓண்ட்ரிலா கேட்டதற்கு, அந்த நபர் மிகவும் திமிராகப் பதிலளித்துள்ளார்.
“அதிக உறவுகளில் இருந்த பெண்கள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன; நான் ஒரு ஆண், அதனால் எனக்கு இந்த விதி பொருந்தாது” என்று அவர் கூறியுள்ளார்.
அந்த நபரின் இந்த அபத்தமான பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓண்ட்ரிலா, “நீங்கள்தான் பெண்களை ஏமாற்றப் போகிறீர்கள்” என்று கூறி அவரது வரண் வேலையை அப்படியே பாதியில் விட்டுவிட்டு வந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த நபரின் குறுகிய மனப்பாங்கிற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
