தலைநகர் டெல்லியில் கோடை வெயில் தகித்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குக் கல்வி இயக்குநரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில் மிக முக்கியமாக, மாணவர்களின் உடலில் நீர்ச்சத்துக் குறைவதைத் தடுக்க ‘வாட்டர் பெல்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் ஒவ்வொரு 45 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை பிரத்யேக பெல் அடிக்கப்படும்; அப்போது மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும், மாணவர்கள் ஒருவருக்கொருவர் உடல்நலத்தைக் கண்காணிக்கும் வகையில் ‘படி சிஸ்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. திறந்தவெளி வகுப்புகள் மற்றும் வெயிலில் நடக்கும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை நேர அசெம்பிளிகளை நிழலான இடங்களிலோ அல்லது உள்அரங்குகளிலோ நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்குக் குளிர்ந்த மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விழிப்புணர்வு வாசகங்களைப் பள்ளிகளில் ஒட்ட வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மே 2-ஆம் தேதிக்குள் மண்டலக் கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.