உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், காதலித்த ஒரே காரணத்திற்காக 16 வயது மகளைத் தந்தையே துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் விஜய்குமார் சௌபே என்பவரின் மகள் வந்தனா, ஒரு இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த இளைஞருடன் வந்தனா ஓடிப்போன நிலையில், அவர் மைனர் என்பதால் போலீசார் அவரை மீட்டு வந்துள்ளனர். அந்த இளைஞர் சிறை சென்று ஜாமீனில் வந்த பிறகும், வந்தனா அவருடன் மீண்டும் பேச முயன்றது தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தின் ‘கௌரவம்’ பாதிப்பதாகக் கருதிய விஜய்குமார், தனது நண்பர் அப்துல் மன்னான் என்பவருடன் சேர்ந்து மகளைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 13-ம் தேதி, வந்தனாவை ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பாராபங்கி அருகே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் காரை நிறுத்தி, வந்தனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வந்தனாவின் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்துவிட்டு, உடலை சாலையோரம் வீசிச் சென்றுள்ளனர். பின்னர் ஏதுமறியாதவர் போல மகளைக் காணவில்லை எனத் தந்தையே போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் தந்தையும் அவரது நண்பரும் சிக்கியுள்ளனர்.
