இந்தியாவில் உள்ள சுமார் 82 சதவீத நிறுவனங்கள், அடுத்த ஓராண்டுக்குள் தங்களது தற்போதைய சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை விடவும் செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் அதிவேகமாக வளர்ச்சி அடையும் என்று எச்சரித்துள்ளன. ‘ரூப்ரிக்’ நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் செயல்படும் ஏஐ ஏஜெண்டுகளில் வெறும் 26 சதவீதத்தை மட்டுமே நிறுவனங்களால் முழுமையாகக் கண்காணிக்க முடிகிறது.

இந்த கண்காணிப்பு குறைபாடு காரணமாக, மனிதத் தலையீடு இன்றி செயல்படும் இந்த ஏஐ அமைப்புகள், நிறுவனங்களின் முக்கியமான தரவுகளைக் கையாளுவதிலும் முடிவுகளை எடுப்பதிலும் புதிய பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குகின்றன. குறிப்பாக, இவை “நிழல் பணியாளர்கள்” போலச் செயல்படுவதால், ஹேக்கர்கள் இவற்றுக்கான அணுகலைப் பெற்று சைபர் தாக்குதல்களை நடத்த அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற 81 சதவீத நிறுவனங்கள், ஏஐ ஏஜெண்டுகள் எடுக்கும் தவறான முடிவுகளைச் சரிசெய்யவோ அல்லது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவரவோ தங்களிடம் போதிய வசதிகள் இல்லை என்று கவலை தெரிவித்துள்ளன. மேலும், 66 சதவீத நிறுவனங்கள் தற்போதைய ஏஐ பாதுகாப்பு ஆலோசனைகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதாகவும், நடைமுறைக்கு அவை போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளன.

மேலும் 2027-ம் ஆண்டிற்குள் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் சைபர் தாக்குதல்களில் சுமார் 50 சதவீதம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமே நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பாதுகாப்பு உத்திகளையும் துரிதமாக மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.