தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் தா. வேலுவின் தனி உதவியாளராக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது வீட்டில் பெருமளவில் பணப் புழக்கம் இருப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் இன்று சத்தியமூர்த்தியின் இல்லத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் ரூ. 2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணுவதற்காகப் பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
பணம் மட்டுமின்றி, அந்த வீட்டில் இருந்து வாக்காளர் பட்டியல்கள், சில முக்கிய டைரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான ரகசிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் இவ்வளவு பெரியத் தொகை சிக்கியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
