தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் பிக்பாஸ் பிரபலம் ஜூலிக்கு, நடிகை வனிதா விஜயகுமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூரில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கூறிய ‘காளை மாடு’ குட்டி ஸ்டோரியை விமர்சித்து ஜூலி வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து த.வெ.க. தொண்டர்களுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் முற்றியது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜூலி புகாரும் அளித்துள்ளார். மேலும், தி.மு.க.வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் அவர், பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு எதிராகப் பிரச்சாரம் செய்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜூலியின் செயல்களை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது,

“தனக்கு வரும் எதிர்மறையான கருத்துகளுக்கு விஜய் ரசிகர்கள்தான் காரணம் என்று ஜூலி கூறுகிறார். சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்; அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜூலி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். அதைத் தெரிந்துதானே அவர் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றார்? அப்போது வராத வெட்கம் இப்போது ஏன் வருகிறது?

விஜய் அமர்ந்து கொண்டு யாரையாவது திட்டுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பாரா? அவருக்கு மக்கள் பணியாற்றவே நேரம் சரியாக இருக்கிறது. அவரைப் பற்றி எத்தனையோ பேர் விமர்சிக்கிறார்கள்; அதற்கெல்லாம் அவர் ரியாக்ட் செய்வதில்லை.

ஜூலிக்குக் கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. அவர் தி.மு.க.வில் இணைந்திருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், தனது செயல்களுக்காக அடுத்தவர் மீது பழி போடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அரசியலில் தடம் பதித்துள்ள விஜய்க்கு எதிராக ஜூலி மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளும், அதற்கு வனிதா அளித்துள்ள இந்தப் பதிலடியும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.