தேர்தல் நடைமுறைகளின் ரகசியத்தைக் காக்கும் வகையில், வாக்குச்சாவடிக்குள் அலைபேசி பயன்படுத்தவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. விதியை மீறுபவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், ஒரு சில இடங்களில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும்.
வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது: விதியை மீறுவோருக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சிறை தண்டனையுடன் அல்லது தனியாக அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து சிறை மற்றும் அபராதம் ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது, வாக்குப்பதிவின் ரகசியத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அலுவலர்களின் அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படுபவர்கள் மீது உடனடியாகக் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
