பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதைத் திமுக தடுத்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மசோதா நிறைவேறியிருந்தால் வரும் தேர்தல்களில் ஏராளமான பெண் பிரதிநிதிகள் கிடைத்திருப்பார்கள் என்றும், அந்த நல்வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் சிதைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எட்டப்பரை விட மோசமான துரோகத்தைச் செய்துவிட்டு, அதனை வெற்றிப் பெருமிதமாகக் கூறிக்கொள்வது மக்களை ஏமாற்றும்செயல் என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். பெண்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு விழப்போகும் இந்த அரசியல் அடி அந்தச் கட்சியால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றும்அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.