தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் சரிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “நமது எதிரி பலவீனப்பட்டு மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டார்” எனச் சாடினார்.

மேலும் கரூரில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், எதிரிகளை வேரோடு வீழ்த்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், திமுக தனது சொந்த பலத்தை நம்பாமல் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை மட்டுமே நம்பி இயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு உரியப் பதிலடி கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். பிசிஆர் வழக்குகள், போதை மாத்திரை மற்றும் மணல் கடத்தல் தொடர்பான பொய் வழக்குகள் மூலம் அதிமுகவினரைப் பழிவாங்கிய அதிகாரிகள் அனைவரும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிலையில் “அப்போது இருந்த பழனிசாமி வேறு, இப்போது இருக்கும் பழனிசாமி வேறு” என அதிரடியாக முழங்கிய அவர், மக்கள் செல்வாக்கு அதிமுக பக்கமே இருப்பதாகவும், வரும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.