தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் கூட்டணிஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் பெருமைகள் மீட்டெடுக்கப்படும் என்றும், திமுக அரசின் ஊழல்கள் முடிவுக்கு வரும் என்றும் அவர் உறுதியளித்தார். குறிப்பாக, திமுகவில் கருணாநிதி முதல் ஸ்டாலின் மற்றும் உதயநிதி வரை குடும்ப அரசியல் தொடர்வதாகவும், தனது மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தடுத்து நிறுத்தியதாக அமித்ஷா குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றனர்.

தற்போது நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.