தமிழக அரசியலில் உதயநிதி ஸ்டாலினின் வரவு என்பது தற்செயலான நிகழ்வா அல்லது மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் வரைபடமா என்ற விவாதம் தற்போது பொதுவெளியில் விவாதத்திற்கு வந்துள்ளது.  அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது என்ற தொடக்ககாலத் தவிர்ப்புகளில் தொடங்கி, இன்று ‘துணை முதலமைச்சர்’ என்ற அதிகாரத்தின் உச்சாணிக் கிளை வரை அவர் எட்டியிருக்கும் வேகம் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஜனநாயக ரீதியாக ஒரு தலைவர் என்பவர் அடிமட்டத்திலிருந்து மக்கள் செல்வாக்கைப் பெற்று உருவாக வேண்டும். ஆனால், உதயநிதியின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பை விட, திமுகவின் மூத்த தலைவர்களின் ‘விசுவாசப் புகழாரங்களே’ பிரதானமாகத் தெரிகின்றன. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை அடுத்த முதலமைச்சராக முன்னிறுத்திப் பேசுவது, தமிழக ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பத்தின் தனிச்சொத்தாக மாற்றப்படுகிறதா என அதிமுக, பாஜக, தவெக என பல அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றனர். இது மக்களாட்சியா அல்லது நவீன காலத்து மன்னராட்சியா என அரசியல் கட்சிகளும் விமர்சிக்கின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்தாலும், அரசு இயந்திரத்தின் முழுக் கவனமும் உதயநிதியைச் சுற்றியே சுழல்வது நிர்வாக ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையில் நடைபெறும் முக்கிய ஆய்வுக் கூட்டங்கள் முதல் மாவட்ட அளவிலான திட்டங்கள் வரை, பல தசாப்த கால அனுபவம் வாய்ந்த அமைச்சர்களைக் கடந்து உதயநிதிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த இரண்டாம் கட்டத் தலைவர்களை ஓரங்கட்டுவதோடு மட்டுமல்லாமல், அதிகாரப் பரவலாக்கலில் ஒருவித சமமற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

திராவிட மாடல் சொல்லும் ‘சமூக நீதி’ என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்குவதாகும். ஆனால், எட்டு கோடி மக்களின் நலனை விட ஒரு குடும்பத்தின் அதிகாரத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அந்த அடிப்படைத் தத்துவத்திற்கே முரணானது என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் எழுகிறது. தகுதியையும் அனுபவத்தையும் புறந்தள்ளிவிட்டு, ‘வாரிசு’ என்ற ஒற்றைக் காரணத்திற்காகச் சிவப்புக் கம்பளம் விரிப்பதா என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசியல் வரலாறு எப்போதும் தனிநபர் வழிபாட்டை விடக் கொள்கைகளுக்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளது. அரசாங்கம் என்பது ஒரு குடும்பத்தின் அதிகாரப் பரிமாற்றத்திற்கான கருவியாக இருக்கக் கூடாது என்பதில் வாக்காளர்கள் தெளிவாக உள்ளனர். மேலும் வரும் தேர்தல்களில் தமிழக மக்கள் உண்மையான ஜனநாயகத்தைத் தேர்வு செய்வார்களா அல்லது இந்த அதிகார மாற்றத்தை ஏற்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். முடிவை காலம் தான் தீர்மானிக்கும்.