குஜராத் மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதா மாவட்டத்தைச் சேர்ந்த பர்வேஸ்கான் பதான் என்ற வாலிபர், கடந்த 2023-ஆம் ஆண்டு அந்த சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த அருவருக்கத்தக்க செயலை வீடியோ எடுத்த அவர், அதனைத் தனது நண்பர்களுக்குக் காட்டியுள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மிரட்டிய பர்வேஸ்கானின் நண்பர்களும், அச்சிறுமியைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் நீண்டகாலமாக இக்கொடுமைகளைச் சகித்து வந்த சிறுமி, இறுதியாகத் தனது பெற்றோரிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கேதா நகர போலீசார் போக்சோ மற்றும் பாரதீய நியாய சன்ஹிடா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 19 முதல் 26 வயதுக்குட்பட்ட பர்வேஸ்கான் பதான் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
