டெல்லியில் சொத்து மற்றும் பணப் பிரச்சனை காரணமாக தந்தை மற்றும் மகன் அவர்களது வீட்டின் வாசலிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சி.ஆர். பார்க் பகுதியில் உள்ள ‘தாரா’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராகேஷ் சூட் மற்றும் அவரது மகன் கரண் சூட் ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டனர்.
மேலும் நேற்று மாலை கரண் தனது வீட்டின் வெளியே ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கரணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு மகனைக் காப்பாற்ற ஓடிவந்த தந்தை ராகேஷையும் அந்த நபர் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசாத் சித்திக் என்பவருடன் ஏற்பட்ட நீண்டகால சொத்து மற்றும் பணத் தகராறே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்தது. தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
