பழனி தேர்தல் பரப்புரையில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் முதிர்ச்சி குறித்து மீண்டும் ஒருமுறை காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். “நான் இன்று உங்கள் முன் பேசுவதற்கான தகுதியை ஒரே நாளில் பெற்றுவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் மக்களுக்காக நின்று, என் உடம்பைக் குத்துக்கல்லாகத் தேய்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட உழைப்பு விஜய்க்கு வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விஜய்யின் சமீபத்திய பேச்சுகளை விமர்சித்த அவர், “உங்கள் டிரைவர் பையனை எம்.எல்.ஏ ஆக்குகிறேன் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது. அந்த எம்.எல்.ஏ-க்களுக்குத் தொகுதியைப் பற்றித் தெரியுமா? அவர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? எதையுமே யோசிக்காமல் அதிகாரத்தை மட்டும் கேட்பது நியாயமல்ல. உங்களுக்கு இருக்கும் செல்வாக்கும் அன்பும் உங்கள் நடிப்புக்கு மட்டுமே; அது அரசியலுக்குத் தகுதியாகாது” என்று அதிரடியாகத் தெரிவித்தார். பிரகாஷ் ராஜின் இந்த விமர்சனம் தற்போது தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கு எதிராகப் பெரும் விவாதத்தைப் பற்றவைத்துள்ளது.
