தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நண்பர்களே வாலிபரை வெட்டிக்கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் பெங்களூருவில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
மேலும் பழைய முன்விரோதம் காரணமாக, செல்வம், தனசங்கர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூன்று நண்பர்களும் சேர்ந்து சுபாஷை கதிரவன் காலனி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்த வற்புறுத்திய போது ஏற்பட்ட தகராறில், அவர்கள் சுபாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளனர்.
இதனால் கொலை செய்யப்பட்ட சுபாஷின் கை, கால்களைக் கட்டி, அங்கிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். சுபாஷ் மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பாழடைந்த கிணற்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
இந்தத் திட்டமிட்ட கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த செல்வம், தனசங்கர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுப் பழக்கத்தாலும், நண்பர்களுக்குள் ஏற்பட்ட பகையாலும் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
