தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சபரி ஐங்கரன் மற்றும் கட்சித் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டிருந்தது போன்ற ஒரு படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்தப் படம் வைரலானதைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ விஷமிகள் இதனைச் செய்துள்ளதாகக் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் நகரச் செயலாளர் தினேஷ் தலைமையில் அக்கட்சியினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், கட்சியின் தலைவரையும் வேட்பாளரையும் அவமதிக்கும் நோக்கில் பீர் பாட்டிலில் படங்களை ஒட்டி அதனைப் பரப்பிய சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேனியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.