விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்மபிரியா மீண்டும் தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டீஸ்வரன் மற்றும் அவரது அண்ணன் சேர்ந்து, வேலைக்குச் சென்று கொண்டிருந்த குருசாமியை வழிமறித்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து குருசாமியின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள பாண்டீஸ்வரன் மற்றும் அவரது அண்ணனைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், பெண்ணின் தந்தை கொல்லப்பட்ட சம்பவமாக மாறியிருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
