டெல்லியின் மிக உயர்தரமான குடியிருப்புப் பகுதியான அலகநந்தாவில் உள்ள தாரா அப்பார்ட்மென்ட்டில், பணத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மகன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வரும் அசத் குரேஷி என்ற ஃபைனான்சியர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கரண் சூட் (30), அவரது தந்தை ராகேஷ் சூட் (60) மற்றும் உறவினர் ராகுல் ஆகியோரை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் ராகேஷ் மற்றும் அவரது மகன் கரண் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், கரண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அசத்திடம் கடன் வாங்கியிருந்ததும், அதற்கான வட்டியைத் தீர்த்த பிறகும் அசத் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் காரிலிருந்து இறங்கி வீட்டிற்குச் செல்லும்போது, மறைந்திருந்த அசத் திடீரெனத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்குக் கூச்சலிட்டும், அக்கம் பக்கத்தினர் யாரும் உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அசத் குரேஷியை காஜியாபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். உயர்தர குடியிருப்பிலேயே நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் டெல்லிவாசிகளை உறைந்து போகச் செய்துள்ளது.
