மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைக்குச் சுற்றுலா வந்த ரஷ்யப் பெண்ணிடம், உள்ளூர் சமூக வலைதளப் பிரபலம் ஒருவர் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி வீடியோ வெளியிட்டது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவில் இருந்து குவாலியர் கோட்டையைப் பார்க்க வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவை, ‘ராதே குர்ஜார்’ என்ற சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் அணுகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இவர், தனது ‘ரீல்ஸ்’ வீடியோவிற்காக அந்த ரஷ்யப் பெண்ணை தன்னுடன் தோன்றுமாறு கேட்டுள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு ஹிந்தி மொழி தெரியாது என்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ராதே குர்ஜார், வீடியோ பதிவாகிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்ணைப் பார்த்து ஆபாசமான மற்றும் இழிவான வார்த்தைகளை ஹிந்தியில் பேசியுள்ளார். அந்தப் பெண் அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல், புன்னகைத்தபடியே “யெஸ், யெஸ்” (Yes, Yes) எனக் கூறி கட்டை விரலை உயர்த்திக் காட்டியுள்ளார். இந்த வீடியோவை ராதே குர்ஜார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.விருந்தினரே தெய்வம் என்ற இந்தியப் பண்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்ட ராதே குர்ஜார் மீது மத்தியப் பிரதேச போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். வீடியோவில் அந்தப் பெண்ணின் அருகில் நின்றிருந்த மற்றவர்களும், இன்ஃப்ளூயன்சர் பேசிய ஆபாசப் பேச்சைக் கேட்டுச் சிரிப்பது போன்ற காட்சிகள் இன்னும் வேதனையளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்களால் குவாலியர் மற்றும் இந்தியாவின் நற்பெயர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையே கடுமையாகப் பாதிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். “இதுபோன்ற அநாகரீகச் செயல்களால் ஆக்ராவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குவாலியரில் தங்குவதைத் தவிர்த்து, நேரடியாக ஜான்சி அல்லது ஓர்ச்சா போன்ற இடங்களுக்குச் சென்றுவிடுகின்றனர்” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ ஆதாரங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ‘வியூஸ்’ (Views) மற்றும் ‘ஃபாலோயர்களை’ அதிகரிக்க வெளிநாட்டுப் பெண்களை இதுபோல அவமதிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.