தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிச்சயம் வருத்தப்படுவார் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், நடிகருமான பழ.கருப்பையா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். விஜய்யைச் சந்தித்துப் பேசியபோது, முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடியுங்கள் என்று தான் அறிவுரை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் அவருடன் நடித்த அனுபவம் கொண்ட பழ.கருப்பையா, தற்போது விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாமோ என்று விஜய் எண்ணும் நிலை வரும் என அவர் எச்சரித்துள்ளார். விஜய்யின் அரசியல் பிரவேசம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழ.கருப்பையாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
