அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி அதீனா ஸ்ட்ராண்ட் (Athena Strand) வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட சிறுமியின் கடைசி நிமிட வீடியோ காட்சிகள், அங்கிருந்த நீதிபதிகள் மற்றும் உறவினர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியது.
ஃபெடெக்ஸ் (FedEx) பார்சல் விநியோக வாகன ஓட்டுநரான டேனர் ஹார்னர் (34), சிறுமி அதீனாவைக் கடத்திச் சென்றபோது, அந்த வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டன. வீடியோவில், “நீ ஒரு கடத்தல்காரனா?” என்று அச்சத்துடன் அச்சிறுமி கேட்கும் குரல் பதிவாகியுள்ளது. அதற்குப் பதிலளித்த ஹார்னர், “சத்தம் போடாமல் அமைதியாக உட்கார், இல்லையென்றால் உன்னைக் காயப்படுத்துவேன்” என்று மிரட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான உரையாடலைக் கேட்ட சிறுமியின் குடும்பத்தினர், நீதிமன்ற அறையை விட்டு கதறியபடி வெளியேறினர்.
வாகனத்தில் இருந்த கேமராவை ஹார்னர் மறைப்பதும், சிறுமி தனது தாயாரைக் கேட்டு அழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. நீண்ட நேரம் சிறுமியின் அலறல் சத்தமும், வாகனத்தின் உள்ளே எதையோ தட்டும் சத்தமும் கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவறுதலாகச் சிறுமி மீது வாகனத்தை மோதிவிட்டதாகவும், அந்தப் பதற்றத்தில் அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் ஹார்னர் காவல்துறையிடம் முன்னதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் திட்டமிட்டே இந்தக் கொடூரத்தைச் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
விசாரணையின் தொடக்கத்திலேயே ஹார்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமா அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜூரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஹார்னர் கூறிய தகவல்களில் அவர் கொலை செய்தார் என்பது மட்டுமே உண்மை; மற்றவை அனைத்தும் பொய். இவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்த்தரப்பு ஹார்னர் ஆட்டிசம் (Autistic) பாதிப்புடையவர். அவரது மூளை வளர்ச்சி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பிஞ்சுச் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
