நாக்பூரில் நடைபெற்று வரும் விசிஏ விதர்பா டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா சிக்ஸர் மழை பொழிந்து மைதானத்தை அதிர வைத்துள்ளார். இப்போட்டியில் களமிறங்கிய அவர், வெறும் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 36 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். குறிப்பாக, தான் சந்தித்த 6 பந்துகளில் 5 பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரது இந்த அதிரடி ஆட்டம் மற்றும் சிக்ஸர் மழை குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் காட்டுத்தீயாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஜிதேஷ் சர்மாவின் இந்த அசுரத்தனமான பேட்டிங் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் இந்த மைதானத்தின் எல்லைக் கோடு அளவு குறித்து இணையத்தில் பெரும் விவாதமே கிளம்பியுள்ளது. சர்வதேச போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தொடர் நடைபெறும் மைதானத்தின் பவுண்டரி அளவு மிகவும் சிறியதாக இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். பந்து பேட்டில் பட்டவுடனேயே மிக எளிதாக பவுண்டரி எல்லையைத் தாண்டி விடுவதைக் குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த மைதானத்தின் அளவை கிண்டல் செய்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருவது இச்செய்தியை மேலும் பேசுபொருளாக்கியுள்ளது.
